இலங்கை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த வெளிநாட்டு பெண் ; மருத்துவப் பரிசோதனையில் வெளியான பொருள்
போதைப்பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணிடம் இருந்து 80 கிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் வெளியேற்றிய கழிவிலிருந்து 80.9 கிராம் எடையுள்ள கொக்கெய்ன் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனை
சந்தேகநபர்கள் தங்கள் உடலுக்குள் கொக்கெய்ன் மறைத்து வைத்துள்ளனரா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் வைத்திய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (12) அன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் வளாகத்தில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு வெளிநாட்டுப் பிரஜைகளில் இந்தப் பெண் சந்தேகநபரும் ஒருவர் ஆவார்.
பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை (12) அன்று 1.46 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்ட நிலையில் பின்னர் இந்த நான்கு சந்தேகநபர்களும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு மேலும் விசாரணைக்காக நீதிமன்றம் 7 நாட்கள் தடுப்புக் காவலுக்கு அனுமதி அளித்திருந்தது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.