விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த வெளிநாட்டு பிரஜை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்பது கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து அறிவிக்கப்படாத "கிரீன் சேனல்" ஊடாக வெளியேற முயன்ற பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த 66 வயதான நபரை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (08) அதிகாலை கைது செய்தனர்.
கால்களை சுத்தம் செய்யும் பிரஸ்கள்
சந்தேகநபர் தனது சூட்கேஸில் 02 கிலோ 759 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை மிக நுணுக்கமாக மறைத்து , கால்களை சுத்தம் செய்யும் பிரஸ்கள் 114 இல் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
கொலம்பியாவில் இருந்து இந்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கிய சந்தேகநபர், கத்தார் தோஹாவுக்கு வந்தார்.
அங்கிருந்து , புதன்கிழமை (08) அன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜை , மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.