பெண்ணை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கு நேர்ந்த கதி!
பண மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணொருவரிடம் பணம் பறித்த சம்பவம் தொடர்பிலேயே அவர் நேற்றைய தினம் (13-12-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் பணியக அதிகாரி ஒருவர் மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
பணம் வழங்கியும் உறுதியளித்தபடி வேலை வழங்கப்படாததால் பணியகத்தின் விசாரணை பிரிவில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (14-12-2023) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.