இலங்கையில் 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! எதற்கு தெரியுமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்குக் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கும், சில்லறை எரிபொருள் சந்தைக்குள் நுழைவதற்கும் 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், சீனாவின் சினோபெக் நிறுவனம், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் இம்மாத இறுதிக்குள் கையெழுத்திடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
3 வெளிநாட்டு நிறுவனங்களையும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறைவடையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதன் மூலம் அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் கட்டணமான 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறையும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
3 நிறுவனங்களும் தலா 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை மாதாந்தம் இலங்கைக்கு கொண்டு வரும் என இலங்கை அரசாங்கம் நம்புகிறது.
இந்த முடிவு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை, அது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என அந்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்கு நிதியளிப்பதற்காக உள்ளூர் வங்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு தங்கள் இலாபத்தை இலங்கையில் வைத்திருக்கவும் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.