கராபிட்டிய பற் சிகிச்சை பிரிவுக்கு போதைப்பொருட்களுடன் வந்த பாதணி
காலி, கராபிட்டிய போதனா மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவுக்குள் போதைப்பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமையாளர் அற்ற இறப்பர் பாதணிகள் சோடியொன்றை வைத்தியசாலைக் காவல்துறையினர் நேற்று (10) மீட்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை பிரிவில் அநாதரவாகக் காணப்பட்ட பாதணிகள் குறித்து மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

பாதணிகளின் அடிப்பகுதியை வெட்டி ஹெரோயின்
இதன் போது, பாதணிகளின் அடிப்பகுதியை வெட்டி அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1700 மில்லி கிராம் ஐஸ், 1620 மில்லி கிராம் ஹெரோயின், 690 மில்லி கிராம் ஹேஷ் மற்றும் 2110 மில்லி கிராம் புகையிலை ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
நேற்று முன்தினம் பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் சிகிச்சைக்காக இந்தப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அவருக்கு வழங்குவதற்காகவே எவரோ ஒருவரால் இந்தப் போதைப்பொருள் அடங்கிய பாதணிகள் அங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.