2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் நுழைவுச்சீட்டுக்களின் விலைகள் தொடர்பான விமர்சனங்களை அடுத்து, ஃபிபா 60 அமெரிக்க டொலர் விலையிலான மலிவு விலை நுழைவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
104 போட்டிகளுக்கும் குறைந்த விலையிலான நுழைவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தகுதிபெற்ற நாடுகளின் உண்மையான ரசிகர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால்பந்து சங்கத்திற்கும் ஒதுக்கப்படும் நுழைவுச்சீட்டுக்களில் 10 வீதம் இந்த ஆதரவாளர் நுழைவு அடுக்கு எனும் குறைந்த விலைப்பிரிவின் கீழ் வரும். இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளின் குழுநிலை போட்டிகளுக்கு தலா 400 நுழைவுச்சீட்டுக்கள் இந்த விலையில் கிடைக்கும்.
மொத்த ஒதுக்கீட்டில் 50 வீதம் மலிவு விலையிலும் மீதமுள்ள 50 வீதம் ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியர் பிரிவுகளாகவும் பிரிக்கப்படும்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த முடிவை வரவேற்றாலும், சாதாரண ரசிகர்கள் போட்டிகளைக் காண இன்னும் அதிகமான நடவடிக்கைகளை ஃபிபா எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை ஒரு "வெற்று சைகை" என வர்ணித்துள்ளதுடன், இது ரசிகர்களை ஏமாற்றும் ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளது.
ஆரம்பத் திட்டத்தின்படி, ஒரு ரசிகர் இறுதிப் போட்டி வரை இங்கிலாந்தைப் பின்தொடர 5,000 யூரோவுக்கும் மேல் செலவாகும் நிலை இருந்தது.
இந்த நுழைவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த நாடுகளின் கால்பந்து சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தகுதியான ரசிகர்களைத் தெரிவு செய்வதற்கான விதிகளை அந்தந்த சங்கங்களே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.