உணவு டெலிவரி ஊழியர்கள் செய்த கொடூரம்; சம்பவத்தால் ஷாக்!
இந்தியாவின் டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தலைக்கவசத்தால் (Helmet) தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியின் மிகவும் நெரிசலான 'கன்னாட் பிளேஸ்' (Connaught Place) பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

16 நாட்கள் உயிருக்குப் போராடிய தொழிலதிபர்
டெல்லி பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலதிபர் சிவம் குப்தா என்பவருக்கும், மூன்று உணவு டெலிவரி ஊழியர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர்கள், தாங்கள் வைத்திருந்த தலைக்கவசங்களால் சிவம் குப்தாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவம் குப்தா, 16 நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த டெல்லி காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளதுடன், தலைமறைவாக உள்ள மூன்றாவது சந்தேக நபரைத் தேடும் பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் டெலிவரி ஊழியர்களால் தொழிலதிபர் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.