யாருமற்ற கச்சதீவுக்கு செல்லாமல், அருகம்பை பிரதேசத்திற்கு சென்று பாருங்கள் ; அநுரவிற்கு கோரிக்கை
இஸ்ரேலின் யுத்தக் குற்றவாளிகள் நாட்டுக்கு வருகின்றனர். நாட்டின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அருகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
எனவே யாருமற்ற கச்சதீவுக்குச் செல்வதை விடுத்து அருகம்பை மற்றும் வெலிகம பிரதேசங்களுக்கு சென்று உண்மையை அறியுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இஸ்ரேலின் யுத்தக் குற்றவாளிகள் அருகம்பையில்
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இஸ்ரேலுக்கு இலவச வீசா வழங்கினர். முழு உலகமும் இஸ்ரேலை புறக்கணிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இவ்வாறு செயற்படுவதிலிருந்து அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.
தமிழ் நாட்டில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய் கூறியதை பெரிதாக எடுத்துக் கொண்டு ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கின்றார். உண்மையில் யாருமற்ற கச்சதீவுக்கு செல்வதை விட அருகம்பை மற்றும் வெலிகமவுக்கு செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இஸ்ரேலின் யுத்தக் குற்றவாளிகள் அருகம்பை பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர். நாட்டில் இஸ்ரேலியர்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சுற்றுலாப்பயணிகள் எனக் கூறிக் கொண்டு நாட்டுக்கு வருபவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் தாக்குகின்றனர்.
நாட்டின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அருகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். அவர்களது நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளன. இஸ்ரேலின் யுத்தக் குற்றவாளிகள் நாட்டுக்கு வருகின்றனர்.
பலஸ்தீனில் சிறுவர்களையும் பெண்களையும் ஊடகவியலாளர்களையும் கொன்று குவித்தவர்; சுற்றலாப்பயணிகளைப் போன்று இலங்கையில் குடியேறிக் கொண்டிருக்கின்றனர். இவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.