உடன் பதவி நீக்கம் செய்யுங்கள்: மஹிந்த குறித்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு கோரி 11 பங்காளி கட்சிகளும், அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழுவினரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் யோசனையும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேட்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சி தேசிய செயற்குழுவை நியமிப்பதற்கும், புதிய பிரதமர் மற்றும் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நாடாளுமன்ற உடன்படிக்கையின் மூலம் நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் எனவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சுக்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து அதற்கேற்ப அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்குமாறும் அந்தக் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வையும் கடிதம் முன்மொழியப்பட்டுள்ளது.