வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதி ; களத்தில் இறங்கிய வட மாகாண ஆளுநர்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று (18) நேரடி களப் பயணத்தை மேற்கொண்டனர்.
மழைக்காலங்களில் மாந்தை கிழக்கு பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, வன்னிவிளாங்குளம் - பனங்காமம்பற்று வீதி மற்றும் செல்வபுரம் காட்டுக்கரை வீதி ஆகியவற்றில் புதிய பாலங்களை அமைக்கவும், விரிவுபடுத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

பணிப்புரை
இது தொடர்பான மதிப்பீடுகளை நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்கள் இணைந்து முன்னெடுக்கப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
பாண்டியன்குளம் - செல்வபுரம் பகுதியில் முடங்கியுள்ள ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை, சூரியக்கல மின்சக்தி மூலம் மீள இயக்குவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நட்டாங்கண்டல் பிரதேச மருத்துவமனை விடுதிகளை உடனடியாகத் திருத்தியமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது.