வாடகைக்கு வீடு தேடுவதாக கூறி அரங்கேற்றிய சம்பவம்! ஐவர் சிக்கினர்
வாடகைக்கு வீடு தேடுவதாக கூறி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பேராதனை, பிலிமதலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடகைக்கு வீடு வாடகைக்கு
வீடொன்றை தேடிச் செல்லும் போர்வையில் தலவத்துகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குச் சென்று அங்கு தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது வீட்டின் உரிமையாளரான பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி காயப்படுத்தியதாகவும் தூக்க மாத்திரைகள் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குழுவினர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து அங்கு உணவகத்தை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
தங்க நகை கடைக்கு விற்பனை
இந்நிலையில் திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி மருதானையில் உள்ள தங்கக் நகை கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மற்றுமொரு பகுதியை பேராதனை பிரதேசத்தில் உள்ள அடகு நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.