மீன்பிடி விவகாரம் எழுப்பிய புதிய பரபரப்பு ; இந்திய மீனவர்களின் உறவினர்கள் போராட்டம்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் இன்று (25) காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களின் உறவினர்கள் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடியில் ஈடுபட சென்ற 10 மீனவர்கள் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து செய்யப்பட்டு பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குறுதி வழங்கியமையை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.