டக்ளஸ் தேவானந்தாவின் திட்டத்தை நிறுத்திய கடற்றொழில் அமைச்சர்!
வடகடலில் இந்திய மீனவர்கள் பணம் செலுத்தி மீன்களை கொல்லலாம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் வகுத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர அரசின் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , இந்திய மீனவர்களுக்கு வடகடலில் மீன்பிடிக்கும் வாய்ப்பையும் வழங்க இருந்ததாக என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (10) தெரிவித்தார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது
எனினும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்திய-இலங்கை கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் நேரடியான கலந்துரையாடல் மூலம் மிகவும் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதற்கு மாற்றாக அமையும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் அதிகளவில் வடகடலுக்கு அத்துமீறி வரும் வேளையில் இந்திய மீனவர்கள் வடகடலுக்கு வருவதற்கு ஏதேனும் அனுமதி வழங்கினால் அது பெரும் அச்சுறுத்தலாக மாறுவதுடன் தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் மாறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை வடகடலுக்குள் பலவந்தமாக வரும் இந்திய மீனவர்களை கைது செய்வதை கடற்படை நிறுத்தாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.