600 ஆண்டுகளில் இதுவே முதல் முறை; 19ஆம் திகதி நிகழும் கிரகணம்!
எதிர்வரும் 19ஆம் திகதியன்று மிக நீண்ட சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதனை உலகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பகுதிநேரமாக பார்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சுமார் 600 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழும் மிக நீண்ட சந்திரகிரகணம் இது எனவும் கூறப்படுகின்றது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.
வழக்கமாக பெளர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வின் போது நிலவின் மீது விழக்கூடிய சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அதனை பகுதி நேர சந்திர கிரகணம் என்பார்கள். ஆங்கிலத்தில் penumbral lunar eclipse என அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் இந்த பகுதி நேர சந்திர கிரகணத்தை காண முடியும்.
இந்திய நேரப்படி காலை 11:31:09 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், மாலை 5:33:40 வரை நீடிக்கும். அதாவது 6 மணி நேரங்களும் இரண்டு நிமிடமும் சந்திர கிரகணம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் என்பது கடந்த 600 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். 15ஆவது நூற்றாண்டில் சரியாக 1440ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி இது போல நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்திருப்பதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.
அதேசமபயம் எதிர்வரும் 19ஆம் திகதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் மிக நீண்ட சந்திர கிரகணம் என்ற சாதனையை அடுத்த 468 ஆண்டுகளுக்கு தன்வசம் வைத்திருக்கும். ஏனெனில் இது போல அடுத்த நீண்ட சந்திர கிரகணம் 2489ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி தான் நிகழும்.
1451ஆம் ஆண்டு தொடங்கி 2650ஆம் ஆண்டு வரையிலும் 973 பகுதிநேர சந்திர கிரகணங்கள் நிகழும். சூரிய கிரகணம் போல அல்லாமல் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணாலேயே பாதுகாப்பாக பார்க்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் அண்டை பகுதிகளில் இந்த பகுதி நேர சந்திர கிரகணத்தை பார்க்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.