முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த பிரித்தானியா!
பிரித்தானியா முதலாவது கருப்பை மாற்று அறுவை சிகிச்சையினை மேற்கொண்டு மருத்துவ வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
பிரித்தானியாவில் Oxford இல் உள்ள சர்ச்சில் (Churchill Hospital) வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 9 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் நீடித்த அறுவை சிகிச்சையின் மூலம் சகோதரியின் கருப்பை 34 வயதுடைய இளைய சகோதரிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நன்கொடை வழங்கிய பெண்ணிடம் இருந்து கருப்பையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை சுமார் 8 மணித்தியாலம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமது அறுவை சிகிச்சை வாழ்க்கையில் இது மிகவும் அழுத்தமான வாரமாக இருந்தாலும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் இருக்குமென தாம் நம்புவதாக சிரேஷ்ட அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தி மருந்துகளை உற்கொள்வது அவசியமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஏற்கனவே அமெரிக்கா, சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் மேலும் சில மாதங்களில் 2 அவது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.