பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு
அம்பாறை , திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ரி56 ரகத் துப்பாக்கித் தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக அமைந்துள்ள குறித்த கிணற்றிலிருந்து, துப்பாக்கிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார் ஆயுதப் பாகங்களை மீட்டுள்ளனர்.
இதன்போது, ஒன்பது ரி56 ரகத் தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட பாகங்களுடன் கூடிய மூன்று ரி56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் ஆறு இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர், மீட்கப்பட்ட ஆயுதப் பாகங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்