தமிழ் யுவதி உட்பட ஐவரின் உயிரை பறித்த தீ விபத்து ; பணியில் இணைந்து சில நாளிலேயே 19 வயது இளைஞன்
ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடைமைகளால் அடையாளம் காணப்பட்ட உடலம்
இவ்விபத்தில் ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய வரதராஜ் தமயந்தி, தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 24 வயதுடைய கொதாகொட சிதுகே சஹன் உதார ,கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த மரியோ எட்வர்ட், தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய வதுகல கமகே திலீப் மதுசங்க மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த 24 வயதுடைய சசின் தில்ஷான் ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தகமகே திலீப் மதுசங்க என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீ விபத்தின் போது நச்சுப் புகையை சுவாசித்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தொழிற்சாலையின் உட்பகுதியை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியதுடன், அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை, தெஹிவளை, ஹொரானா தீயணைப்பு பிரிவுகள் மற்றும் விமானப்படையின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
ஹோமாகம ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சில உடல்களை, உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டை, தோடு மற்றும் கழுத்து மாலை போன்ற அடையாளங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளனர்.
தொழிற்சாலையின் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.