விற்பனை நிலையத்தில் தீ விபத்து ; முற்றாக சேதமடைந்த கடை
கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (02) மாலை 5.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் குறித்த விற்பனை நிலையத்தின் மேல் மாடி மற்றும் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கசிவு
தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர்ச்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.
கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதோடு, தீயணைப்புப் படையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தீ தற்போது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.