யாழ். போதனாவில் தீ விபத்து ; நாசகார செயல் அல்ல – கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான ஆரம்ப கட்ட காரணமாக மின் கசிவு இருக்கலாம் மேலும், “இது நாசகார செயல் என நான் நம்பவில்லை என தெரியவந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறுதி அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதியான காரணத்தை கூற முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலதிக விசாரணை
தீ விபத்துக்குள்ளான வைத்தியசாலையின் களஞ்சியசாலையை நேரில் பார்வையிட்டு, வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் சொத்துகளும் சேதமடைந்துள்ளன” என்றார்.
களஞ்சியசாலையில் தீ பரவியபோது அதனை கட்டுப்படுத்துவதற்காக வைத்தியசாலை ஊழியர்கள், யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து செயல்பட்டதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தீயில் அழிந்த மருந்துகளுக்குப் பதிலாக தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சேதமடைந்த களஞ்சியசாலையை விரைவாக புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்காக அதிகாரிகள் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

