எவன்கார்ட் ஒப்பந்தத்தால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ; விசாரணைக்கு கோப் குழு தீர்மானம்
இலங்கை கடற்படை மற்றும் ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் நிறுவனம் இணைந்து முன்னெடுத்த கடல்சார் பாதுகாப்புச் சேவைகளில் 'எவன்கார்ட்' (Avant-Garde) நிறுவனத்தை தொடர்புபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்புகள் குறித்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவன்கார்ட் நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமையினால் அரசாங்கத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெடெ் நிறுவனத்தின் அதிகாரிகள் அண்மையில் கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்த போது, எவன்கார்ட் நிறுவனத்தை இந்தச் சேவைகளில் இணைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கோப் குழுத் தலைவர் விரிவாகக் கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன், இவ்வாறான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு எவன்கார்ட் நிறுவனத்தை இணைத்துக் கொண்டது யாருடைய தேவைக்காக எனக் கோப் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.
குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் சமரவீர சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.