உக்கிரமடைந்த நிதி நெருக்கடி : அமைச்சரவைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை
இலங்கையில் நிதி நெருக்கடி நிலைமைகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் தாம் அடுத்த கட்டமாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது நட்பு நாடுகளை நாடுவதா என்பதில் அமைச்சரவைக்குள்ளும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அமைச்சரவையில் ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ள போதிலும் இன்னொரு தரப்பினர் அதனை நிராகரித்துள்ளதுடன் இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவி கேட்போம் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி மற்றும் கடன் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இது நாட்டின் அடுத்த கட்ட சகல நடவடிக்கைகளையும் வெகுவாக பாதிக்கவுள்ளதாகவும் அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தற்காலிக சமாளிப்பு நடவடிக்கைகளை கையாளாது நீண்டகால திட்டங்களை இப்போதே முன்னெடுப்பது மட்டுமே நெருக்கடி நிலைமைகளில் இருந்து விடுபட இருக்கும் தீர்வு எனவும், இப்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே மிகச்சிறந்த நகர்வாக அமையும் எனவும் அமைச்சரவையில் பங்கேற்ற ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து 10 ஆண்டுகால வேலைத்திட்டமொன்றை கையாள்வதன் மூலமாக அழுத்தங்களில் இருந்து விடுபட முடியும் எனவும் பிரதமருக்கு நிலைமைகள் மற்றும் அதன் பாரதூரத்தன்மை விளங்கும் என்பதையும் அமைச்சர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் மூலம் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும், அது மேலும் நெருக்கடியை உருவாக்கும். எனவே சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிப்போம், ஆனால் மாற்று வழிமுறையாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் உதவிகளை பெற்றுக்கொள்வோம்.
நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது சிறந்த ஒன்றாகும் என இன்னொரு தரப்பு அமைச்சர்கள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பதென்பதில் பாரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லை என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்காது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சிலர் தெரிவித்தனர்.