பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் ; இலங்கை வீரருக்கு பீபா அபராதம் விதிப்பு
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரர் ஒருவருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக FIFA விதித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்டப் போட்டில் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது.
பலஸ்தீன விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்'
அதன் பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் குழுவாக படம் எடுத்துக்கொண்டபோது ஒரு வீரர் மாத்திரம் 'பலஸ்தீன விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்' என்ற வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றினார்.
இந்த வாசகம் தாங்கிய உள்ளங்கியை அணிந்திருந்த வீரர், அந்தப் போட்டியில் விளையாடாதபோதிலும் கொண்டாடட்டத்தின்போது ஏனைய வீரர்கள் மத்தியில் தோன்றியிருந்தார்.
இது தொடர்பாக ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்துடன் இணைந்து செயற்பட்ட பீபா, தனது ஒழுக்காற்றுக் கோவை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட வீரருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக பீபா விதித்துள்ளது.