யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் பெரும் திருவிழா; விசேட ரயில் சேவைகள்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) அன்று இடம்பெற்ற வினாநேரத்தின் போது, இரா. சாணக்கியன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவை
தற்போது வாரத்திற்கு 4 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவையை, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி சேவையாக அதிகரிக்க வேண்டும்.
முப்படையினரின் முற்பதிவு காரணமாகப் பொதுமக்கள் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதால், வடக்கு நோக்கிய ரயில்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க வேண்டும் என சாணக்கியன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "மடு, நல்லூர் மற்றும் தலதா மாளிகை உற்சவங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் பற்றாக்குறையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நெருக்கடிகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காண்போம்" என உறுதியளித்தார்.
மேலும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னரே வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருவிழா 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் விமரிசையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.