சுரேஷ் சலேக்கு வைத்தியசாலையில் பெண் தாதி கடும் எச்சரிக்கை!
இது வைத்தியசாலை, இங்கே இருக்கும் நோயாளிகளை நாங்கள் சும்மா உயிரிழக்க அனுமதிக்க முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை பெண் தாதி சுரேஷ் சலே எச்சரித்ததாக கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னெடுத்து வந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் மற்றும் உடலில் ஏற்பட்ட திடீர் சிக்கல்கள் காரணமாகக் கடந்த 7 ஆம் தேதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பலவந்தமாக மருந்துகளை உட்கொள்ள வைத்த தாதி
அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், நிலைமை சீரானதைத் தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்டு வந்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக உணவையும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளையும் உட்கொள்ளக் கறாராக மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு கடமையில் இருந்த பெண் தாதி ஒருவர், சலே மருந்து உட்கொள்ளாமை குறித்துக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சலேவின் மருந்து தவிர்ப்பைக் கண்டு கோபமடைந்த அந்த தாதி, "இது வைத்தியசாலை, இங்கே இருக்கும் நோயாளிகளை நாங்கள் சும்மா உயிரிழக்க அனுமதிக்க முடியாது நோயாளிக்கு மருத்துவர் என்ன பரிந்துரைக்கிறாரோ, அந்த மருந்துகளை நீங்கள் கட்டாயம் குடித்தே தீர வேண்டும் எனச் சலேவிற்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, சலேவின் அதிகாரப் பின்னணிகளைப் பொருட்படுத்தாமல், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அவருக்குப் பலவந்தமாக மருந்துகளை உட்கொள்ள வைத்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாதியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னர் சுரேஷ் சலே மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ள போதிலும், தனது கைதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டத்திலேயே ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.