பலூன் விற்ற பெண் மோடல் அழகியான சம்பவம்; நெகிழ வைக்கும் உண்மைகள்
அழகு என்பது வெளிப்பூச்சு இல்லை. அகத்தின் ஒளி. இதனை நம் கண் முன்னே உண்மையாக்கும் நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது. கேரளாவின் அண்டலூர் கோவில் திருவிழா வருடத்திற்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறக் கூடியது.
புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் திருவிழாவின் தெருக்களில் அலைந்து திரிந்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது, பலூன் விற்கும் ஒரு பெண் எதேர்ச்சையாக அவருக்குத் தென்படுகிறார்.
அந்தப் பெண்ணைத் தன்னுடைய கேமரா கண் வழியே பார்த்திருக்கிறார் அர்ஜுன். அங்கு எடுத்த இரண்டு மூன்று புகைப்படங்களை அவர் இஸ்டாவில் பதிவிடவே அதற்கு குவிந்த ஹார்டுகளில் திக்குமுக்காடி போயிருக்கிறார்.
அந்தப் பெண்ணின் பெயர் கிஷ்பூ. கிஷ்பூவின் புகைப்படங்களையும் அதற்கான வரவேற்பையும் கிஷ்பூவுக்கும் அவரது பெற்றோருக்கும் காட்டி சம்மதம் பெறவே போட்டோ சூட் வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ரெம்யா பிரஜூல் மேக்கப் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி மெனிக்யூர். பெடிக்யூர், பேஷியல் எல்லாவற்றிற்கு பிறகு போட்டோ சூட் நடந்திருக்கிறது. பலூன் விற்பதில் இருந்து மாடல் ஆக மாறியுள்ள பெண்ணுக்கு வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர் மக்கள். தன் பெண் படிக்க வேண்டும், இப்படி ஏதாவது பொருளை விற்று வாழ வேண்டும் என்கிற நிலையில் இருந்து அவள் வெளியே போனால் போதும் என்பதே கிஷ்பூவின் பெற்றோர்கள் விரும்புவதாக இருக்கிறது.
இதே போலான நிகழ்வு மம்மிக்கா என்கிற முதியவருக்கும் சமீபத்தில் நிகழ்ந்தது. கேரள கோழிக்கோட்டைச் சேர்ந்த 60 வயதான தொழிலாளர் மம்மிக்கா லோக்கல் பிராண்ட் ஒன்றிற்கு படு ஸ்டைலாக விளம்பரம் கொடுத்ததன் வழியே அன்பைச் சம்பாதித்திருக்கிறார்.
திறமையும் அழகும் நாம் இருக்கும் நிலையில் அல்ல, இயல்பில் இருக்கிறது என இவ்விரு சம்பவங்களும் மற்றுமொரு முறை மெய்பித்து இருக்கின்றன.