இலங்கையில் போதை வர்த்தகரின் பெண் கூட்டாளிக்கு நேர்ந்த கதி
போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொம்பஞ்சகே அசங்க சானக்க பொன்சேகா எனப்படும் 'படோவிட்ட அசங்க'வின் போதைப்பொருள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகக் கருதப்படும் இப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெஹிவளைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கை
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகச் செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸ, அபேசேகர வீதியிலுள்ள வீடொன்றிற்கு முன்னால் இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து 62 கிராமும் 600 மில்லிகிராமும் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இவர் நீண்டகாலமாகப் 'படோவிட்ட அசங்க'வின் இலங்கையிலான போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.