மாற்றுத்திறனாளி மகள் என்றும் பாராது தந்தை அரங்கேற்றிய கொடூரம்; காட்டிக்கொடுத்த DNA
இந்தியாவின் மும்பையில் தனது 20 வயதுடைய, மாற்றுத்திறனாளி மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 48 வயதுடைய தந்தை ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், குறித்த இளம்பெண் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

DNA ஆதாரங்களின் அடிப்படையில் தந்தை கைது
அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. அந்தப் பெண் மாற்றுத்திறனாளி என்பதால், அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆரம்பத்தில் தகவல்களைப் பெறுவதில் காவல்துறையினருக்கு பெரும் சவால்கள் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் உட்பட சுமார் 16 பேரின் DNA மாதிரிகளைச் சேகரித்து சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பம் கலைக்கப்பட்ட பின்னர், கருவிலிருந்த DNA மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. நீண்ட பரிசோதனைகளின் முடிவில், கடந்த ஜனவரி 27 அன்று வெளியான மருத்துவ அறிக்கையில், அந்தப் பெண்ணின் தந்தையே இதற்குப் பொறுப்பு என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் போது, தந்தை தன்னைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதை அவர் சைகை மொழியில் வெளிப்படுத்தியுள்ளார்.
தந்தையினால் ஏற்படக்கூடிய உயிராபத்து மற்றும் அச்சம் காரணமாகவே அவர் ஆரம்பத்தில் உண்மையைச் சொல்லத் தயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே 16 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது DNA ஆதாரங்களின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.