குடும்பம் முழுவதையும் அழித்து தற்கொலை செய்து கொண்ட தந்தை
இந்தியாவில் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்கா மாவட்ட பர்தாகி கிராமத்தை சேர்ந்த 30 வயதான குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸார் வீடு சென்று பார்வையிட்டபோது, அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தனர்.
நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில், இவர்களது மகள் நீண்ட காலமாக தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாலும், சிகிச்சைக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டதாலும் குடும்பம் கடனில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தொடர்ச்சியான மனவருத்தம் நிலவிய நிலையில், கடந்த ஏழு மாதங்களாக மனைவி குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கியிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் கணவரின் வீட்டிற்கு திரும்பிய பிறகு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காரணமாக கணவன் முதலில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் இரண்டு குழந்தைகளையும் அதே முறையில் கொன்றுவிட்டு, வீட்டை விட்டு வெளியில் சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.