ATM இயந்திரத்தை எட்டி உதைத்தவருக்கு நேர்ந்த கதி
வங்கியொன்றின் தானியங்கி பணப்பொறி இயந்திரத்தில் (ATM) 500 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது தாமதமானதால், ஆத்திரமடைந்து இயந்திரத்தை உதைத்து சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படட 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய அரச வங்கியின் ATM இயந்திரத்திற்கு சேதம் ஏற்படுத்திய காரணத்துக்காக ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைத் தண்டனை
கொழும்பு சங்கராஜ மாவத்தையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன, நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக முந்தைய நீதிமன்ற தினத்திலேயே அறிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டம், இயந்திரத்துக்குச் சொந்தமான நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நஷ்டத்தை செலுத்துவதற்கு சந்தேகநபர்கள் தயாராக இருப்பதால், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சம்பவத்துக்காக முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.