இறுதிச்சடங்கிற்கு தயாரான குடும்பம்... உயிருடன் வந்த கைதி ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்
நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.

இறுதிச்சடங்கு
வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் கடும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.