தமிழர் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்! பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்
திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (19-09-2023) திருகோணமலை – திரியாய் கல்லம்பத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
குறித்த தாக்குதலில் கல்லம்பத்தைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான பழனியாண்டி மணிவண்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் காட்டுக்கு விறகு வெட்டச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் விசாரனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி படுகாயம்
மேலும், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரை யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியவுல் பொத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் குளத்தை அண்மித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் மேலும் 2 பொலிஸாருடன் ஈடுபட்டபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மற்றைய இருவரும் தப்பியோடியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரி கலேவெல - தபகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.