திருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை!
திருகோணமலை உள்ள பகுதியொன்றில் காட்டுயானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மயிலவெவ பகுதியில் இன்றையதினம் (06-08-2023) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பக்மீகம - அடம்பன பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான கே.சந்ரதாஷ எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கே.பியசாந்த பண்டா என்பவர் காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்திலேயே இருப்பதாகவும், சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தரவுள்ளார் எனவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.