பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன் ; தாயின் விபரீத முடிவால் எரிந்து கருகிய குடும்பம்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியை சேர்ந்த சத்தியபாலன் ஸ்ரீஜா தம்பதிக்கு அஞ்சலி (26) என்ற மகளும், அகிலேஷ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்துள்ளார்.
மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி ஊருக்கு வந்திருந்தார்.
பற்றி எரிந்த வீடு
அஞ்சலி தனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்துள்ளார்.
இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பெண் கேட்டு வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்தனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீஜா,தனது உடலில் தீவைத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது.
இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன. இதில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
இதற்கிடையே வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கும், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் அவர்கள் அனைவரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஸ்ரீஜா உயிரிழந்துள்ளார்.
சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். படுகாயம் அடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எருமேலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.