கோழி இறைச்சி விலை தொடர்பில் பரவும் பொய்யான தகவல்!
நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு காணப்படுவது போன்றதொரு மாயையை உருவாக்கி, கோழி இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பலொன்று, நாட்டில் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்துள்ளதாக தேசிய கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சுஜீவ தம்மிக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் முன்னர் இருந்த விலைக்கே, தற்போதும் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி வர்த்தகர்களுக்கு கோழியை விநியோகித்து வருகின்ற போதிலும், சந்தையில் கோழி இறைச்சிக்கான தேவை அதிகமாக காணப்பட்டு வருவதே கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கான காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையின்படி, தோல் அகற்றப்படாத ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 950 ரூபாய்க்கும், தோல் உரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது பண்டிகைக் காலம் என்பதால், எதுவித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சி விநியோகிக்கப்பட்டு வந்தாலும், கோழிப் பண்ணைகளில் கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
ஆகவே, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.