நுவரெலியா Lovers Leap இல் ஆபத்தில் முடிந்த செல்பி மோகம்!
நுவரெலியா, லவர்ஸ் லீப்ஸ் (Lovers Leap) நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்பி எடுக்க முயன்றபோது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் 52 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

அபாயகரமான பாறை ஒன்றின் மீது நின்று செல்பி
தனது மனைவியுடன் நீர்வீழ்ச்சியின் உச்சிப் பகுதிக்குச் சென்ற குறித்த சுற்றுலாப் பயணி, அங்குள்ள மிகவும் அபாயகரமான பாறை ஒன்றின் மீது நின்று செல்பி (Selfie) எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர், கீழே வீழ்ந்துள்ளார்.
தகவலறிந்து நுவரெலியா தலைமையக காவல்துறைப் பரிசோதகர் பி.எஸ்.சி. சஞ்சீவவின் வழிகாட்டலில் விசேட மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் காயமடைந்தவரை மீட்டுள்ளனர்.
காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிஒல் சுற்றுலாப் பயணிகள் அபாயகரமான பகுதிகளில் நிழற்படம் எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்