மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? போலி சாமியாரை நம்பி சிறுநீரை குடித்த மக்கள்!
இந்தியாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி, பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஷியூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்சய் பகாரே என்பவர் சாமியாராக இருக்கிறார். இவர் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.
கம்பால் அடிப்பது, காலணிகளை கவ்விக் கொண்டு சுற்றி வர சொல்வது
திருமணமாகாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய முடியும் என்றும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு அகோரி பூஜை மூலம் குழந்தை கிடைக்க வைக்க முடியும் என்றும், ஆவிகளை விரட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.
போலி சாமியார் மூட நம்பிக்கைகளை 2 ஆண்டுகளாக பரப்பி வந்த நிலையில் தன்னை ‘பாபா’ என்று அழைத்துக் கொண்டுள்ளார். அதனை நம்பி ஏராளமான பக்தர்கள் இவரிடம் வந்துள்ளனர்.
தன்னிடம் வந்தவர்களை கம்பால் அடிப்பது, காலணிகளை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி வர சொல்வது போன்ற செயல்களை செய்துள்ளார்.
மேலும், இலை, தழைகளை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவது, சிறுநீரை குடிக்க வைப்பது போன்ற இழிவான செயல்களை செய்துள்ளார்.
இந்நிலையில், மூட நம்பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ரகசிய கமெராக்கள் மூலம் போலி சாமியார் செய்யும் செயல்களை சேகரித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் போலி சாமியாரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.