மக்களே அவதானம்; போலி பொலிஸார் வீட்டுக்கு வரலாம்!
தங்களை பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் என கூறிக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
போதைப்பொருளுடன் கொள்ளையிட்ட பொருட்களும் மீட்பு
இதன்போது போலிபொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 ,36 வயதுடைய ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து 83 கையடக்கத் தொலைபேசிகள், 4 டெப் இயந்திரங்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இவ்வாறான கொள்ளையர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானதுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.