தமிழர் பகுதியில் சிக்கிய கில்லாடி வைத்தியர் ; அதிரடி முற்றுகையால் நீண்டகாலமாக அரங்கேறிய செயல் அம்பலம்
மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்ததாக வாழைச்சேனை காவல்நிலைய உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

போலி மருத்துவர்
இவர் மருத்துவர் போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, அதனை நம்பவைத்து கடந்த மூன்று வருடங்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த மருத்துவ நிலையம் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. இதன்போது, அங்கு பணியில் இருந்த நபரிடம் மருத்துவ அடையாள அட்டை மற்றும் நிலையத்திற்கான அனுமதிப்பத்திரங்களை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
எனினும், அவரிடம் முறையான எந்தவொரு ஆவணங்களும் இல்லையென்பதும், அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த முற்றுகையின் போது, அந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மீட்டுள்ளனர்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.