உலகளவில் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக ஊடகங்கள்
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சேவைகள் இன்று (12) திடீரென உலகளவில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமலும், தகவல்களைப் பரிமாற முடியாமலும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு
இந்தத் தொழில்நுட்பக் கோளாறானது உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் ஒரே மாதிரியாகப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் மிகக் கடுமையான முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளையில், இன்னும் சில பகுதிகளில் உள்ள பயனர்களுக்குச் சேவைகள் வழக்கம் போல் சாதாரணமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் சேவை முடக்கத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.