தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் வியாழக்கிழமை (10) வரை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, விண்ணப்பங்களை தபாலில் அனுப்பாது நேரில் சென்று மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி செவ்வாய்க்கிழமை (8) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில்,
தபால் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு விண்ணப்ப முடிவுத் திகதி வியாழக்கிழமை (10) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தபால்மூல வாக்களிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதிப் பெற்ற அரச உத்தியோகஸ்தர்கள் வியாழக்கிழமை (10) நள்ளிரவுக்கு முன்னர் விண்ணப்பங்களை உரிய மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபாலில் அனுப்பும் போது ஏற்படும் காலத்தாமதத்தை தவிர்க்கும் வகையில் 09,10 ஆம் ஆகிய இரு தினங்களில் பூரணப்படுத்திய தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை தபால்மூலம் அனுப்பாமல்,
அவற்றை ஒவ்வொரு மாவட்டவாரியாக வேறுப்படுத்தி வெவ்வேறு கடிதவுறைகளில் இட்டு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைப்பது மிகவும் உகந்ததாக இருக்கும்.
ஆகவே தபால்மூல வாக்களிப்புக்காக தற்போது மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பு இனியும் நீடிக்கப்படமாட்டாது என்பதை அரச உத்தியோகஸ்த்தரகள் பணிவுடன் கவனத்திற் கொள்ள வேண்டும்.