கொழும்பு மருத்துவமனையில் ஐவர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமா?
கொழும்பு ஐனுர் மருத்துவமனையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு 'ஒண்டான்செட்ரான்' (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து உறுதியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை மாதிரிகள்
அதோடு அவர் உயிரிழப்பு குறித்து தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நோயாளிகள் உயிரிழப்பதற்கு முன்னரே 'ஒண்டான்செட்ரான்' தடுப்பூசியின் 4 தொகுதிகளை (Batches) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் ஏனைய அனைத்து தொகுதிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய 10 மருந்து வகைகளையும் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.