மட்டக்களப்பு மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரிப்பதில் பிள்ளையானும் பங்காளியாகி விட்டாரா?
மட்டக்களப்பில் உள்ள ஈஸ்ட் லகூன் சொகுசு உணவகத்தில் இராசாங்க அமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஒரு கூட்டம் நேற்று முன் தினம் (16-05-2023) நடைபெற்றுள்ளது.
அதில் கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், பண்ணையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பகுதியளவில், பிள்ளையானின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மகாவலி அபிவிருத்தி அதிகாரிகள் பிர்தாாமாக் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மகாவலி அபிவிருத்திக்காகக் காணிப்களைப் பிரித்து வழங்குவதற்கான முன்னாயத்த செயற்பாடாக இது அமைந்துள்ளது.
இக்கூட்டம் சாமித்தம்பி (பிள்ளையானின் ஆலோசகர்) அவர்களின் தலைமையில் நடைபெற இருப்பதாகவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் கூட்டம் பிள்ளையானின் கூட்டமாகவே நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தின் போக்கினைப் பார்த்தால் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் இருப்பதை அறிந்துள்ளதாக நோக்கர்கள் குறிப்பிட்டனர்.
அந்த வகையில் பண்ணையாளர்களின் மயிலத்தமடு மாதவனைக் காணிகளைக் கூறுபோட்டு அயல் மாவட்ட சிங்களக் குடியேறிகளுக்கு வழங்கும் நோக்கம் மறைமுகமாகக் காணப்படுகின்றது.
அதேவேளை, பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை அபகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கெடுக்கும் எண்ணம் அங்கு காணப்படுகின்றது.
ஏறத்தாழ 3 இலட்சம் கால்நடைகளுக்கு 10,000 ஹெக்டேயர்கள் தேவையொன பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அதனை 3000 ஹெக்டேயர்களாகக் குறைப்பதற்கு பிள்ளையான் தலையாட்டியுள்ளதாக அறியப்படுகின்றது.
மட்டக்களப்பினுள் சட்டவிரோதமாகக் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுசரணையில் குடியேற்றிய சிங்களவர்க்கு சட்டப்படியான அங்கீகாரம் அளித்துப் பதவியைப் பாதுகாப்பதற்கு பிள்ளையான முயல்வதை அவதானிக்க முடிகின்றது.
ஏற்கனவே மேய்ச்சல் தரையில் கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், திருடப்பட்ட போதும் பண்ணையாளர்கள் தாக்கப்பட்ட போதும் பிள்ளையானோ, வியாழேந்திரனோ எட்டியும் பார்க்கவில்லை.பதவிகளைக் கட்டிப்பிடித்தவாறு இருந்தனர்.
அந்த வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து குடியேறிகளை வெளியேற்றுவதத்தான உத்தரவைப் பெற்றனர். 600 பேர்வரை வெளியேற்றவும் பட்டனர். ஆனால் அவர்களைக் குடியேற்றுவதற்கு பிள்ளையான் முயல்வதாக அறியமுடிகின்றது.
அதேவேளை மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவினை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பதற்கும் அடிப்படைவாத அரசியல்வாதிகள் முயலுகின்றனர்.
இதற்கெல்லாம் ஆமாம் சாமிகளாக பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் மாறிவிட்டனர். இதுதான் கிழக்கு மீட்பா ? என்று கிழக்கு மக்கள் கேட்கின்றனர்.
உரிமைப் போராட்டத்தினைக்காட்டிக் கொடுத்தவர்கள், இனவழிப்பாளர்களுடன் கூட்டாட்சி நடாத்துகின்றவர்கள். கிழக்குக்காணிகளை பேரினவாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கவும் முற்பட்டுள்ளனர்.
இவர்களை நம்பிய மக்கள் நட்டாற்றில் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதவி சுகம், பண சுகம் கிடைக்கின்றது, மக்களுக்கு பசியும், பட்டினியுந்தான் மிஞ்சப் போகின்றது என்று மக்கள் உணரக் தலைப்பட்டுள்ளனர்.
கிழக்கெல்லாம் பௌத்த மயமாக்கல் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, தமிழ்மக்கள் தெருக்களில் போராட,பிள்ளையான்,வியாழேந்திரன் கிழக்கை மீட்பதென்பது வெறும் பித்தலாட்டமாகவே அமைந்துள்ளது.