இலங்கைத் தென்னங்கன்றுகள் மாலைதீவுக்கு ஏற்றுமதி
தனது நாட்டில் நடவு செய்வதற்காக , இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து 50,000 கலப்பின தென்னை நாற்றுகளை பெற மாலைத்தீவு எதிர்பார்க்கிறது.
அந்நாட்டு விவசாய அமைச்சர் கலாநிதி ஹுசைன் ரஷீத் ஹசன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவை நேற்று சந்தித்த போது இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்து மாதங்களாவது தேவைப்படும்
அத்துடன், இந்தக் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருமாறும் அவர் கோரியுள்ளார். இது குறித்து தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மல்ராஜ் பீரிஸ் தெரிவிக்கையில் ,
தென்னை மரக்கன்றுகளுக்கான வருடாந்த தேவைக்கு ஏற்ப தமது நிறுவனம் வருடாவருடம் தென்னை மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதால் 50,000 தென்னை மரக்கன்றுகளை மாலைதீவுக்கு வழங்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் தற்போது மாலைதீவுக்கு சுமார் 10,000 தென்னை மரக்கன்றுகளை வழங்குவதற்கு தமது நிறுவனங்களுக்குத் திறன் இருப்பதாகவும், அந்த அளவு தென்னை மரக்கன்றுகளை மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்ய 17 கொள்கலன்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஒரு கலப்பின தென்னைச் செடியை உற்பத்தி செய்வதற்கு குறைந்தது பத்து மாதங்களாவது தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.