ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனத்தில் வெடிபொருள் : இருவர் கைது
இன்று (17) அதிகாலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லேண்ட்க்ரூஸர் வகை வாகனத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடிப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் இன்று (17) அதிகாலை பயணித்த லேண்ட்க்ரூஸர் வாகனத்தை பொலிஸார் நிறுத்திய போது வாகனத்தில் இருந்தவர்கள் அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன் போது வாகனத்தை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் வாகனத்திலிருந்து ஒரு கிலோ கிராம் அமோனியா, ஜெல்கூர், வெடிக்கான கயிறு, ஒரு பந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
கொடகவெல அரகம்பாவிலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ட்ரோன் கேமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் லேண்ட் க்ரூஸர் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.