ஜெபக்கூட்டத்தில் வெடி விபத்து ; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்; விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ
இந்தியாவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜெபக்கூட்டத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
2,300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை 9.45 மணி அளவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.
மூவர் உயிரிழப்பு - 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்த சில வினாடிகளிலேயே அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
இதனிடையே, குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் சரணடைந்துள்ளார். குறித்த ஜெபக்கூட்ட அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
ஜெபக் கூட்டத்திற்கு வருவோர் வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவார்கள் என்பதால், திட்டமிட்டு உணவு பெட்டி வெடிகுண்டு தயாரித்தேன். அதைத்தான் சோதனை செய்ய மாட்டார்கள். நாள் முழுக்க தங்கி ஜெபம் செய்பவர்கள் உணவு பெட்டி கொண்டு வருவார்கள்.
அதனால் அதில் குண்டை கொண்டு வந்தேன். பல நேரங்களில் உணவு பெட்டி பல கேட்பாரற்று கிடந்துள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டேன். நான் ஜெபக் கூட்டத்தில் வைத்த உணவு பெட்டி வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. சந்தேகப்படவில்லை.
அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது இது வெடிக்கும் என்று. வெடிகுண்டை தன்னந்தனியாகத்தான் தயாரித்தேன். எனக்கு யாரும் உதவி செய்யவில்லை.
அந்த சபையின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பதால் 2 வருடமாக திட்டமிட்டு இதை செய்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில்ஜெபக் கூட்டத்தில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவம் கேரளாவை அதிரவைத்துள்ளது