அனர்த்த நிலைமையை கையாளும் விதம் தொடர்பில் விளக்கம்
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டை மறுசீரமைத்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கொழும்பில் உள்ள ராஜதந்திரப் பிரதிநிதிகளுக்குத் தெளிவூட்டுவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போது, அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்து அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அவசர நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மறுசீரமைத்தல், மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் ராஜதந்திரப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
வெள்ளம் மற்றும் தற்போது நிலவும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் உடனடி நடவடிக்கைகள் குறித்தும், மறுசீரமைப்புக்காக எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சவாலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்குத் தமது உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக ராஜதந்திரப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
அத்துடன், மனிதாபிமான உதவிகள், வசதிகள் மற்றும் தொடர்ச்சியான நிவாரணங்களை வழங்குவதற்கும், மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கும் இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு ஒத்துழைப்பதாகவும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டை மீள்சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவளிக்கவும், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் அவசரப் பதிலளிப்புப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகப் பணிகள் மற்றும் கொழும்பில் உள்ள ராஜதந்திரத் தூதுக்குழுக்களுடன் நெருக்கமாகச் செயல்படவுள்ளது.
தற்போது நிலவும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறித்த விபரங்களை அறிவதற்காக, இலங்கை சுற்றுலா அவசர அழைப்பு இலக்கமான (1912) ஐ அழைக்கவும்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொதுத் தொடர்பாடல் மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோவை 070 788 7778 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்வதன் மூலமும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சந்திப்பில் அரசாங்கப் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் Zoom ஊடாக இணைந்திருந்தனர்.