வவுனியாவில் காலாவதியான ஐஸ்கிரீம் கோன்கள் பறிமுதல்
வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களின் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான 750-க்கும் மேற்பட்ட ஐஸ் கிறீம் கோன்களை விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவில் பாடசாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனம் ஒன்றில் கொண்டு சென்று இத்தகைய காலாவதியான ஐஸ் கிறீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கிடைத்தத் தகவலின் அடிப்படையில், வவுனியா சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் அதிரடிச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனையின் போது நொச்சிமோட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750-க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ் கிறீம் கோன்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்