காலாவதியான 4.5 மெட்ரிக் டொன் பொருட்கள் அழிப்பு
வத்தளை மற்றும் ஹெந்தலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளுக்கு அமைவாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஏராளமான காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
வத்தளை மற்றும் ஹெந்தலை பகுதிகளில் உள்ள மூன்று வணிக வளாகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4.5 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான காலாவதியான கருவாடு மற்றும் பேரீச்சம்பழங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இவ்வாறு அழித்துள்ளது.
அழிக்கப்பட்ட பொருட்களில் 3.6 மெட்ரிக் டொன் காலாவதியான பேரீச்சம்பழம், 1 மெட்ரிக் டொன் காலாவதியான நெத்திலி மற்றும் காலாவதியான 300 கிலோ கிராம் கருவாடு ஆகியவை அடங்கும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இலக்கம் 1875/38 (15.08.2014) என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை (உத்தரவு இலக்கம் 52) மீறியமை தொடர்பில் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 27 ஆம் திகதி குறித்த வர்த்தகர்களுக்கு 55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.