"எனது கொள்கைக்கு இணங்காதவர்கள் வெளியேறுங்கள்" - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கரிம உரங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் நாட்டின் ஒரே விவசாயக் கொள்கை பசுமை விவசாயமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அறிக்கையின்படி, அரசாங்கம் இயற்கை உரங்களை மட்டுமே விநியோகிப்பதாகவும், இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே மானியம் வழங்குவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது தொடர்பாக விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், இதை செயல்படுத்தும் போது இரசாயன உர மாஃபியாவை அடையாளம் காண வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான கொள்கை வெற்றியடைவதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். மக்களுக்கான பயிர்கள் மற்றும் உரங்களை வழங்குவது தொடர்பில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போது பெய்த மழையால் காய்கறிகள் உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது.
மேலும், உரம் வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம், மகசூல் பணிகளை பெரிதும் பாதித்துள்ளது. எனினும், மாவட்ட அளவில், மொத்த விவசாய நிலத்தில் சுமார் 70% நிலப்பரப்பில் சாகுபடி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தநிலையில், விவசாயிகளின் எதிர்ப்புக்களுக்கும், பயிர்ச்செய்கையில் தாமதம் ஏற்படுவதற்கும் உரிய முறையில் விளக்கமளிக்கப்படாமையே காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளுக்கு சரியான பயிற்சி அளிக்காத அதிகாரிகள் மீது ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பசுமை விவசாயக் கொள்கைக்கு அமைவாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குப் பதிலளிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைக்கு உடன்படாத அதிகாரிகள் வெளியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.