கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள்; விக்னேஸ்வரன் தரப்பிற்கு மிரட்டல்!
யாழ்ப்பாணத்தில் நேற்று தமிழ் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றபோது வெளிநாடு ஒன்றிலிருந்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரமுகர் ஒருவருவருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் திருநெல்வேலி, திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவும் இதில் கலந்து கொண்டன. எனினும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.
எனினும் அவருக்கு பதிலாக பேராசிரியர் சிவநாதன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அவருக்கு ஐரோப்பிய நாடொன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது.
அந்த அழைப்பில் பேசியவர், கூட்டத்திலிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டுமென்றும், இந்த கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கலந்து கொள்ளக்கூடாதென்றும் மறுமுனையில் பேசியவர் கடும் தொனியில் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த எச்சரிக்கையால் பதறிப்போன பேராசிரியரை கூட்டத்திலிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தியதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.